வியாழன், 30 ஜூலை, 2026

வாலிபம் பாதுகாக்கப்படட்டும்



கிறிஸ்துவுக்குள் பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! ஆண்டவரும் இரட்சகர்மாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இந்நாட்களில், சுற்றிலும் நிறைந்திருக்கும் உலகத்தின் கவர்ச்சிகளுக்கும் மற்றும் ஈர்ப்புகளுக்கும் நடுவே, தன் இளமையை யாருக்கென்று அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்க இயலாமல் தத்தளிக்கும் வாலிபரும் மற்றும் தடுமாறும் வாலிபரும் அநேகர். பாதைகள் கண் முன்னே பல இருந்தும், பயணத்தை எதிலே தொடங்குவது என்ற குழப்பத்தினால் பாகை சரியும் வரை பயணத்தைத் தொடங்காமல் இருப்பிடத்திலேயே இருந்து கொண்டிருக்கும் வாலிபர் இன்று அநேகர். அங்கும் இங்கும் பயணித்து, அலசடிப்பட்டு, அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து அடங்கிப் போய்விடும் வாலிபரும் உண்டு. மனதிற்குப் பிடித்த மாதிரிகளாக, மனிதர்களையே தேடினதினால், மறுமையை மறந்து மண்ணிலேயே தங்கள் பாதையை அமைத்துக் கொண்ட வாலிபர்களும் உண்டு. 

எது எப்படியாயினும்,  வாலிபம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் வந்து, விலகிச் சென்று விடக்கூடிய ஒரு காலமே. என்ற போதிலும், ஆண்டவருடைய கரத்தில் வாலிபத்தை நாம் அர்ப்பணிப்போம்மென்றால், "நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்" (ஏசா. 65:20) என்ற வசனத்தின் படி, முதிர் வயது வரைக்கும் நமது வாலிபத்தின் மெலன் அவருடைய கரங்களால் பாதுகாக்கப்படும் என்பதே வேதம் நமக்கு கூறும் செய்தி.  ஆண்டவருடைய கரங்களில் நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்தால் மாத்திரமே இது சாத்தியம் என்பதே சத்தியம்.

தானியலுக்கு முன்பாக, பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே ராஜ போஜனமும் ராஜா குடிக்கும் திராட்சரசமும் வைக்கப்பட்டபோது, "தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்" (தானி. 1:8) என்று வாசிக்கின்றோமே. அந்நியநாடு, அந்நிய மொழி, புதிய பெயர்—இவையனைத்தும் அவனைச் சூழ்ந்திருந்தபோதிலும், தன் உள்ளத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தான் தானியல். தன்னைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளை மாற்ற தானியேலுக்கு பெலனில்லாதிருந்தபோதிலும், தன்னையும், தன் இருதயத்தை மாசுபடாமல் காத்துக்கொள்வதில் அவன் உறுதியாக இருந்தான். இன்றைய நாட்களில், பல வாலிபர் தோற்கும் இடம் இதுவே. "நான் தேவனுக்காகத்தான் வாழவேண்டும் என்று நினைக்கின்றேன்; பரிசுத்தமாகத்தான் வாழவேண்டும் என்று முயற்சிக்கின்றேன்; பாவமற்ற வாழ்க்கை வாழவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன்; ஆனால், சூழ்நிலைகள் எனக்குச் சாதகமாக இல்லையே; என் விருப்பத்திற்கு உதவுபவர் எவரும் என் பக்கத்தில் இல்லையே; தனியனாக இந்தப் போரில் ஜெயிப்பது என்னால் இயலாமற் போய்விடுகிறதே" என்ற மனப் புழுக்கத்தில் புழுவாக நீங்கள் நொந்துகொண்டிருப்பீர்கள் என்றால், தானியலே உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் முன்மாதிரி. பிரியமான வாலிபரே! உங்களுக்கும் தேவனுக்கும் இடையிலான உறவு இறுகிவிடுமென்றால், உங்களுக்கு விரோதஞ் செய்ய சுற்றிலும் இருப்பவைகள் இல்லாமலேயே போய்விடும்; உங்கள் வாலிபமும் பாதுகாக்கப்படும்; இது நிச்சயம். 

இன்றைய நாட்களில் உங்கள் சுற்றுப்புறமும் பாபிலோனை ஒத்திருக்கலாம். பள்ளியிலோ, வேலையிடத்திலோ, சமூக வலைத்தளங்களிலோ, நண்பர்கள் மத்தியிலோ—'எல்லோரும் செய்கிறார்கள்' என்ற அழுத்தம் உங்களையும் சூழ்ந்திருக்கலாம். சூழ்நிலையை ஒருவேளை உங்களால் மாற்றமுடியாதபோததிலும், யாரும் உங்களைத் தீட்டுப்படுத்திவிடாதபடி உங்களை நீங்களே தடுத்து கொள்ளலாமே.; இதனால் உங்கள் வாலிபம் பாதுகாக்கப்படுமல்லவா. இவ்வுலகத்தின் வாலிபர் விசாலமான பாதையில் பயணித்தாலும், கிறிஸ்துவை அறிந்த நீங்கள் குறுகலான வழியில் செல்ல கற்றுக்கொள்ளுங்கள்.

அப்படி செய்வீர்கள் என்றால், பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டதைப் போல (தானி. 1:15) உங்கள் முகங்களும் தேவனுக்கு முன்பாக காணப்படும் என்பது நிச்சயம்.

கிறிஸ்துவில் பிரியமான வாலிபரே! இன்று உங்கள் உள்ளத்தில் ஒரு தீர்மானம் எடுப்பீர்களா? உலகம் தரும் 'ராஜபோஜனத்தை' விட, தேவன் தரும் தூய்மையான வாழ்க்கையே மேலானது என்று. இன்று இவ்வுலக வாழ்க்கையில் சிறிதாகத் தோன்றும் இந்தத் தியாகம், நாளை உன் வாழ்க்கையில் தேவனுடைய கிருபையை வெளிப்படுத்தும் திறவுகோலாக  நிச்சயம் மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாலிபம் பாதுகாக்கப்படட்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! ஆண்டவரும் இரட்சகர்மாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இந்நா...