ஞாயிறு, 15 டிசம்பர், 2024

வாலிபனே! உன் உச்சிதமானவைகள் யாருக்கு உணவாகிறது?

 


கிறிஸ்துவில் பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் புதுவருட வாழ்த்துதல்கள். இப்புதிய ஆண்டில், தேவனோடுள்ள உங்கள் உறவு, உங்களை தேவ சித்தத்திற்கு நேராக நகர்த்த ஜெபிக்கிறேன். வருடத்தின் தொடக்க நாட்களில், பல்வேறு திசைகளிலிருந்து எழும் ஆராதனைகள், ஜெபங்கள், கூடுகைகள் மற்றும் செய்திகள் என அனைத்தும் தீர்மானங்களின் திசையினை நோக்கி உங்களை உந்தித் தள்ளினாலும், 'உங்கள் வாலிபத்தின் உச்சிதமானவைகள் யாருக்கு உணவாகிக்கொண்டிருக்கிறது?' என்பதனை இப்புதிய ஆண்டில் சற்று ஆராய்ந்து அறியவும், ஆகாதவைகளை அகற்றி ஆண்டவர் பாதம் சேர்ந்து, உங்கள் அர்ப்பணிப்பினைப் புதுப்பித்துக்கொள்ளவும் கர்த்தர் உதவிசெய்வாராக!

இந்நாட்களில், உங்கள் வாலிபத்தின் வாழ்க்கையை, கானான் தேசத்துடன் சற்று ஒப்பிட்டுப் பார்த்து, அதன் அடிப்படையில் சில உண்மைகளை உணர்ந்துகொள்ள உங்களை அழைக்கிறேன். கானான் தேசத்தைச் சுதந்தரிக்கும்படியாக இஸ்ரவேல் ஜனங்களை தேவன் அழைத்து வழிநடத்தினபோது, கானான் தேசத்தை வேவுபார்க்கும்படியாக அனுப்பப்பட்ட மனிதர்கள், மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி (எண். 13:27) என்று அத்தேசத்தினைக் குறித்து உயர்த்திப் பேசினபோதிலும், 'ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம் என்றும், 'நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள்' என்றும், 'நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்' என்றும் சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள் (எண்;. 13:28,31-33).

'கானான் தேசத்தைக் குறித்துச் சொல்லப்பட்டது நற்செய்தி'; எவ்வளவாய் அத்தேசத்தினைச் சுற்றிப் பார்த்தும், அதனைக் குறித்துக் குறைகூற எதுவுமில்லை; ஆனால், அதில் குடியிருப்பவர்களைக் குறித்துச் சொல்லப்பட்ட செய்தியோ துர்ச்செய்தி. இதைக் கேட்டதும், ஜனங்களில் அத்தேசத்தைச் சுதந்தரிக்கவேண்டும் என்று ஆசையுடன் வந்தவர்கள் 'அழத்தொடங்கிவிட்டார்கள்', 'திரும்பிப்போகவும் முடிவெடுத்துவிட்டனர்'. அப்படிப்பட்ட நேரத்திலும், 'தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், ஜனங்களை நோக்கி: 'நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்' (எண்;. 14:6-8) என்று தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! இன்று, கானானைப் போன்ற உங்கள் வாழ்க்கையைக் குறித்ததானச் செய்தி எப்படிப்பட்டது? உங்கள் வாலிபத்தைக் குறித்தும், உங்கள் அறிவைக் குறித்தும், உங்கள் கல்வியைக் குறித்தும், உங்கள் பெலனைக் குறித்தும், உங்கள் செய்கைகளைக் குறித்தும், பிறரோடு நீங்கள் பழகும் விதத்தினைக் குறித்தும் மற்றும் உங்களிடத்தில் வெளிப்படும் அன்பினைக் குறித்தும் ஒருவேளை அநேகர் உங்களை வாழ்த்திப் பேசக்கூடும்; இவ்வுலகில் வாழுகின்ற மக்களைப் பிரியப்படுத்தும் காரியங்கள் அநேகம் உங்கள் வாழ்க்கையில் காணப்படக்கூடும்; என்றபோதிலும், உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும் மேன்மையான இவைகள் அனைத்தையும் ஆளுவது யார்? அனுபவித்துக்கொண்டிருப்பது யார்? உங்களிடத்தில் வெளிப்படும் உச்சிதமானவைகள் அனைத்தும் உணவாகிக்கொண்டிருப்பது யாருக்கு? தேவனுக்குப் பிரியமானவைகளுக்கா? அல்லது தேவனுக்குப் பிரியமற்றவைகளுக்கா? போதை வஸ்துகளுக்கும், தீய பழக்கவழக்கங்களுக்கும், தீய நண்பர்களுக்கும் இவ்வுலகத்தின் மாயமானவைகளுக்கும் தங்கள் வாழ்க்கையை விற்றுப்போட்ட பல வாலிபர்களைக் குறித்த துர்ச்செய்தி, அவர்களது வீட்டாரை, உறவினரை, உடனிருப்போரை, நண்பர்களை மற்றும் சமுதாயத்தை அழச்செய்துவிடக்கூடும்! சமுதாயத்தையே அத்தகைய வாலிபர்களை விட்டு அப்புறமாக்கிவிடக்கூடும்! அதுமாத்திரமல்ல, ஆண்டவருக்காக ஆதாயம்செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன் அத்தகைய வாலிபர்களை நோக்கி வருகின்ற தேவ ஜனங்களையும் திரும்பிப்போகச் செய்துவிடக்கூடும்! ஆண்டவருக்குப் பிரியமற்ற இவ்வுலகத்தின் அந்நிய காரியங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடக்கும் அவர்களை ஆதாயம்செய்வதில் தயக்கத்தையும் தாமதத்தையும் மற்றவர்களுக்கு உண்டாக்கக்கூடும்! 

என்றபோதிலும், இன்றைய நாட்களிலும் 'அந்த தேசத்தை தேவன் நமக்குக் கொடுப்பார்' என்று உங்களைக் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற  ஊழியர்கள் உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம். உங்களை நேசித்து, உங்கள் மீது அன்புகாட்டி, உங்களைத் தேடிவரும் யோசுவா மற்றும் காலேப் போன்ற தேவ ஊழியர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இடம்கொடுப்பீர்களென்றால், உங்கள் வாழ்க்கை தேவனுடையதாகும், தேவனுக்குப் பிரியமில்லாதவைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்த உங்கள் வாழ்க்கை, தேவனுக்குச் சொந்தமாக மாறும், தேவனுக்குப் பிரியமான கானானாக இவ்வுலகத்தாருக்குக் உங்கள் வாழ்க்கை காட்சியளிக்கும். உச்சிதமான உங்கள் வாழ்க்கையின் தாலந்துகள், திறமைகள் மற்றும் அறிவு என அனைத்தும் தேவனுடைய இராஜ்யத்திற்காகப் பயன்படும். இவ்வுலகத்தில் மாத்திரமல்ல, பரலோகத்திலும் உங்கள் பிரயாசத்தின் பெலனைக் காணுமளவிற்கு உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறும். உங்களை வெறுத்தவர்களும், வேண்டாம் என்று ஒதுக்கியவர்களும்கூட உங்களால் பயனடையும் நிலைக்கு உங்கள் பாத்திரம் கர்த்தரால் நிரம்பிவழியும்.  

'உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது' (ஏசா. 1:7) என்ற நிலை மாறி, 'நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை' (எரே. 30:8) என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும். இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தினை இவ்வாண்டில் வாலிபர்களாகிய நீங்கள் சுதந்தரித்துக்கொள்ள கர்த்தர் உங்களை வழிநடத்துவாராக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இறுதி நிமிடங்கள் 20

உலகையே உலுக்கிய நாட்கள் அவை; வீட்டினுள் வாழுவோரையும் விட்டுவைக்காமல் மனிகுலத்தையே தொற்றுநோய் துரத்திக்கொண்டிருந்த காலம் அது. அந்நாட்களில்,...