வியாழன், 19 பிப்ரவரி, 2026

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 




கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். நிலையில்லாத இப்பூமியில் ஆண்டவருக்காக நிற்கும் சாட்சிகளாக அழைக்கப்பட்டவர்கள் நீங்கள்; என்றபோதிலும், வாலிபத்தின் ஓட்டத்தில் ஒருவேளை நான் விழுந்துவிடுவேனோ? என்ற பயத்துடனேயே ஓடிக்கொண்டிருக்கும் வாலிபர்கள் இந்நாட்களில் உண்டு. எங்கே விழுவேன்? எப்படி விழுவேன்? யாரால் விழுவேன்? எதனால் விழுவேன்? ஏன் விழுவேன்? எதற்காக விழுவேன்? போன்ற கேள்விகளை ஒருவேளை சுயமாக நீங்கள் கேட்டுப்பார்த்தால், உத்தரவு கொடுக்க உங்கள் உள்ளத்திற்கும் உதடுகளுக்கும் பெலனிருக்காது. நினையாத நேரத்தில் விழுந்துபோன வாலிபர் பலர்; நினைத்திருந்தும் கவனக்குறைவினால் விழுந்துபோன வாலிபர் பலர்; தடுக்குவதும் மற்றும் தள்ளுவதும் பெலமுள்ளதாயும் தங்களுக்குள்ளோ பெலமில்லாமலிருப்பதினாலும் வீழ்ந்துபோன வாலிபர் பலர்; உதவுவார் மற்றும் தூக்கிவிடுவார் எவரின்றி ஒண்டியாய் வழிகளில் வீழ்ந்து கிடக்கும் வாலிபர் பலர்; அவ்வாறே, எதிரியின் பாதையில் தொடர்ந்து பயணித்து, தொலைதூரம் சென்றபின்பு வீடு திரும்ப திசையறியாமல் திணறும் வாலிபரும் உண்டு. 

பிரியமான வாலிபரே! பாவத்தினால், பாவம் செய்யும் வாலிபரது வாழ்க்கையில் தன் பெலமே ஓங்கி நிற்கவேண்டும் என்றும், தன் குரலே ஓங்கி ஒலிக்கவேண்டும் என்றும் நினைப்பவன் சத்துரு. எனவே, விழுகையைக் குறித்த பயத்திற்கு இடங்கொடுக்காமல், உங்கள் ஆத்துமாவின் பெலத்தை அதிகரித்து, வாலிபத்தை கிறிஸ்துவுடன் வலிமையுள்ளதாக்கிக்கொள்ளுங்கள்.   

எப்படியாகிலும் கிறிஸ்துவை விட்டு உங்களைப் பிரித்து, தன்னோடு சேர்த்துவிடவேண்டுமென்று, வௌ;வேறு விதங்களில் உங்களைச் சூழ சத்துரு யுத்தம் செய்துகொண்டிருந்தாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் 'அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே' (ரோம 8:36,37) என்ற பவுலின் வாழ்க்கை உங்கள் வாழ்க்கையிலும் காணப்படுமாயின் 'நீங்கள் அன்புகூருகின்ற கிறிஸ்துவினாலேயே உங்கள் வாழ்க்கையிலும் ஜெயம் உண்டாகும்' என்பது நிச்சயம். 'உயிரைப் பறித்தாலும் உறுதியாயிருப்போம்' என்று தானியேலைப் போல நீங்கள் நின்றால், பிதாவுடனான உறவினின்று உங்களைப் பிரிக்க பெலனற்றவனாகிவிடுவான் சத்துரு. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோம 8:38,39) என்ற 'அழுத்தமான அர்ப்பணிப்பு' உங்களுக்கு இருந்தால், அச்சம் அவசியமில்லை. 

பிரியமான வாலிபரே, 'தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும், தெளிந்தபுத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்' (2தீமோ. 1:7). அப்படியிருக்க, பயத்தை சத்துரு உங்கள் வாழ்க்கையில் புகுத்தும் சந்துபொந்துகளை அடையாளம் கண்டு அவைகளை அடைத்துவிடுங்கள்; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27).  

ஆனாலும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய மற்றும் ஒரு காரியம் உண்டு; அது, தன் பக்கத்திலிருக்கும் வீழ்ந்தவர்களை, உங்களை வீழ்த்துவதற்காகச் சத்துரு பதிவிருக்கச் செய்வது. ஆம், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகளை (கும்கி) காட்டிலிருக்கும் பிற யானைகளோடு பழகச்செய்து மனிதர்கள் பிடிப்பதைப் போல, தனது கட்டுப்பாட்டில், தனது வலையில், தனது எல்லைக்குள் மற்றும் தனது சொற்படி கேட்கும் வாலிபர்களைக் கொண்டு, பிற வாலிபர்களை தனது வலைக்குள் இழுக்கும் சத்துருவின் தந்திரத்தை வாலிபராகிய நீங்கள் அறிந்துகொண்டு உங்களைத் தப்புவித்துக்கொள்வது அவசியம். தன்னோடு பேசுகிற மற்றும் பழகுகிறவர்கள் யாரென்ற அறிவில்லாத வாலிபர்களின் வாழ்க்கையிலிருந்து ஆண்டவரை அகற்றிவிட இத்தகைய வாலிபர்களை சத்துரு பயன்படுத்துகின்றான். வீழ்ந்தோரின் சோர்புள்ள வார்த்தைகள், தோல்விக்கான காரணங்களைச் சொல்லும் விதங்கள், அவர்களுக்குள் இருக்கும் பயங்கள், அவிசுவாசம் மற்றும் உலகத்திற்கடுத்த காரியங்கள் உறவில் தொடங்கி உங்கள் உயிரில் கலந்துவிடக்கூடும்; விதையாகி வளர்ந்து, விரோதியின் சத்திரத்திலும் உங்களைச் சேர்த்துவிடக்கூடும்; எச்சரிக்கை!! காயம்பட்டுக் கிடக்கும் நேரத்தில், கண்ணீர் விடுவது யாரென்று தெரியாததினால், அவர்களுடன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு தடையமேயில்லாமற்போய்விட்ட வாலிபர்கள் உண்டு. ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல முதலையின் முதுகில் பயணித்த குரங்கின் நிலையைப் போல வாலிபனே உனது வாழ்கை காணப்படுமாயின், இன்றே உன்னைத் தப்புவித்துக்கொள்! இன்றே உன்னைத் தப்புவித்துக்கொள்!! 

செத்த ஈக்களை மற்ற ஈக்களோடு கலந்து, மொத்த ஈக்களும் தன்னையே மொய்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுபவன் சத்துரு.  'செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்' (பிர. 10:1) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே! எனவே, கிறிஸ்துவுக்குத் தூரமானவர்கள் தரும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளைக் குறித்துக் கவனமாயிருங்கள்; அவைகள் கிறிஸ்துவை விட்டு பிசாசின் எல்லைக்குள்ளாக உங்களை இழுத்துச்சென்றுவிடக்கூடும். அவர்களது உடுத்தும் உலகத்தர ஆடைகள், உலகோரைக் கவரும் சிகை அலங்காரங்கள், உலாத்தும் இடங்கள், அணியும் ஆபரணங்கள் உன்னையும் கவர்ந்து உனக்குக் கண்ணியாகக்கூடும். நேர்வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, இடைவழியில் வரும் இவர்களால் இடறிவிழுந்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். இத்தகை மனிதர்களின் வலைகளில் நீங்கள் சிக்கியிருப்பீர்களென்றால், 'வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்' (நீதி. 6:5). அவர்களையும் ஆதாயப்படுத்த முயற்சிக்கிறேன் என்றால், உங்கள் ஆத்துமாவின் பெலத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்; இல்லையேல், அவர்களால் அடித்துச்செல்லபட்டுவிடுவீர்கள். உங்கள் காலடிகள் கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் உறுதியாயிருக்கட்டும்.  உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் அங்கங்களை அழிக்கும் சத்துருவின் அஸ்திரங்களை அடையாளம் கண்டு, உங்களை உயிரோடு காத்துக்கொள்வது உங்கள் கடமையே. 

தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (1யோவான் 5:18). இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். (1கொரி 10:12)

   


ஞாயிறு, 15 டிசம்பர், 2024

இறுதி நிமிடங்கள் 20



உலகையே உலுக்கிய நாட்கள் அவை; வீட்டினுள் வாழுவோரையும் விட்டுவைக்காமல் மனிகுலத்தையே தொற்றுநோய் துரத்திக்கொண்டிருந்த காலம் அது. அந்நாட்களில், சுற்றிலும் சுவர்கள், ஓரமாக இருந்த ஒரேயொரு வாசல் வழியே அவ்வப்போது செவிலியர்களும் மருத்துவர்களும் அவசர அவசரமாக வந்துசெல்லும் காட்சி, இட வலப்புறங்களில் வரிசையாக ஒரே வண்ணத்தில் காணப்பட்ட படுக்கைகளின் மேல் தன்னைப் போலவே மருத்துவமனைச் சீருடையில் சிரம் சாய்த்துப் படுத்திருக்கும் நோயாளிகள், ஒவ்வொருவரின் சப்த நாடிகளும் அடங்கிக்கொண்டிருக்கும் நிசப்தமான நிமிடங்கள் அவை என்ற உணர்வு உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்க, தன்னுடைய நிமிடமும் இத்தரையில் நிறைவுறும் தருவாயில் சிகிச்சையிலிருந்தான் அந்த 19 வயது நிரம்பிய வாலிபன்.   

ஒருபுறம், வீட்டில், இரவுப் படுக்கையின்போது தனது நெஞ்சின் மேலேறி விளையாடும் தனது அக்காவின் ஒன்றரை வயதுக் குழந்தையின் நினைவு அகத்தை ஆக்கிரமித்து நிற்க, உறவுக்கென்று இருபுறமும் ஒருவரும் இல்லாத உள்ளறையிலே, திரைகளின் நடுவே நித்திரை தூரமாய் விலகி நிற்க, படுக்கையில் சிரம் சாய்த்து, தனக்கு நடப்பதைத் தீவிரமாய்க் கவனித்துக்கொண்டிருந்தான் அந்த வாலிபன். குன்றிய மஞ்சள் வெளிச்சத்தில், தலைக்கு நேர் மேலே தன் தலையினை ஆட்டிய வண்ணம் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறி மாத்திரமே, 'கிரீச் கிரீச் கிரீச் ...' என்று தன்னிடமிருந்த பிழையினால் அறையிலுள்ளோர்களோடு பேசிக்கொண்டிருந்தது. இரவு பகலென வேறுபாடு தெரியாத, சூரியக் கதிர் எழுந்து வராத அந்த உள்ளறையின் கதவு திடீரெனத் திறக்கப்பட, செவிலியர் இருவரோடு உள்ளே நுழைந்தார் மருத்துவர் ஒருவர். மரணத்தில் பயணிக்கப் படுத்திருப்போரைக் காப்பாற்றும் தனது இறுதி முயற்சியாக, அனைவரருகிலும் சென்று ஆறுதலாகப் பேசி விசாரித்து, சிகிச்சையளித்துவிட்டு, செவிலியர்கள் காது மடலருகிலும் ஏதோ முணுமுணுத்துவிட்டுச் சென்றார் அவர். மருத்துவர் வெளியேறியதும், செவிலியர்கள் அந்த வாலிபனருகே நின்று தங்களுக்குள் பேசிக்கொண்ட வார்த்தைகள் அந்த வாலிபனின் செவிகளில் விழ, ஏறக்குறைய இன்னும் இருபது நிமிடங்களில் வாழ்வா சாவா என்பது எல்லோருக்கும் தீர்மானிக்கப்படப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டான் அவன். 

ஒருபுறம், தன்னை உருவாக்க தகப்பனாக அப்பா எடுக்கும் முயற்சியைப் புரிந்துகொண்டும், அவருடன் அதிக நேரத்தைச் செலவிடாத எண்ணம் அவனை வாட்டி வதைக்க, பஞ்சில் பற்றும் நெருப்பு போல அம்மாவின் கொஞ்சும் வார்த்தைகளுக்காக நெஞ்சம் விம்மி ஏங்க, விளையாட்டுக்குக்கூட தன்னை விட்டுக்கொடுக்க மனதில்லாத தனது தங்கையின் பாசத்தை நினைத்துத் உள்ளம் தவிக்க, அக்காவிடம் தனக்குக் கிடைக்கும் அரவணைப்பையும், அத்துடன் அக்காவின் மகள் மீது தான் ஊற்றும் அன்பையும் நினைத்து அவன் மனம் போராட, ஒருமுறையாகிலும் அவர்களனைவரையும் பார்த்துவிடத் துடித்தபோதிலும், சிகிச்சை எனும் சிறைக்குள் தான் அடைக்கப்பட்டிருப்பதை நினைத்து மனதில் நொந்துகொண்டான் அவன். உறவுகளிடம் இனி என் உடல்தான் ஒப்படைக்கப்படுமோ? என்ற இறுதி நிமிடங்களுக்குள் அவனது நினைவுகள் வந்து நின்றுவிட்டத் தருணமது. 

ஆரவாரங்கள் ஏதுமின்றி, உடலிலிருக்கும் எண்ணெயில் உயிர் என்னும் திரி எரிவது இனி எத்தனை நிமிடத்திற்கோ! என்ற கேள்வியோடு, வாழ்க்கையின் தீபம் கொஞ்சம் கொஞ்சமாக அணைந்துகொண்டிருக்க, ஐந்து, பத்து, பதினைந்து என நிமிடங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து இருபதைத் தொட்டதும், அறையினுள் நின்றிருந்த செவிலியர்கள் படுக்கையிலிருந்தோரைப் பரிசோதித்து, உயிரிழந்திருந்தோரின் உடல்களை, அந்த வாலிபனது கண்களுக்கு முன்னே அறையிலிருந்து அப்புறப்படுத்தி, உறவினர்களிடம் ஒப்படைக்கத் தொடங்கினர். அந்த வாலிபன் மாத்திரம் திறந்த விழி மூடாமல் செவிலியர்களைத் திரு திருவெனத் திகைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு, அவனை மட்டும் அப்படியே படுக்கையில் விட்டு விட்டு, மற்றவர்களைப் பரிசோதிக்கும் பணியைத் தொடர்ந்தனர்; அந்த வாலிபனோ, தன் படுக்கையிலிருந்து எழுந்து படுக்கைகளின் நடுவே நின்றுகொண்டிருந்தான். அந்நேரம், அறையினுள் திடீரென நுழைந்த மருத்துவரோ, நின்றுகொண்டிருக்கும் வாலிபனை உற்றுப் பார்த்த வண்ணம், ஆச்சரியத்தில் உறைந்து நின்றார். 'இப்பொழுது எப்படி இருக்கிறது தம்பி?' என்ற மருத்துவரின் கேள்வியையும், 'சற்று படுக்கையில் படுங்கள்' என்ற அவரது ஆலோசனையையும் கேட்ட வாலிபன், தான் உயிர் பிழைக்க அவர் உழைத்ததை நினைத்து அவருக்கு நன்றி சொல்லக்கூட மனதற்றவனாக,  சற்றும் தாமதிக்காமல் தப்பித்தோம் பிழைத்தோம் என பயந்து ஓடி, அறைக்கு வெளியே தன் மகனுக்காகக் கண்ணீரோடு காத்து நின்றுகொண்டிருந்த தனது தாயின் கழுத்தைக் கட்டித் தழுவிக்கொண்டவாறு, கனவு கலைந்து விழித்து கட்டிலில் எழுந்தமர்ந்தான்.  

காலையில், தனது வாழ்க்கையைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கிய அவன், 'மரணம்' என்ற மனிதர்கள் எழுதும் பரீட்சையில், மருத்துவர்கள்  உதவினாலும், தேவனே உயர்ந்து நிற்கிறாரென்ற உண்மையைப் புரிந்துகொண்டான். மரண வாசலில் தான் வைக்கப்பட்டுவிட்டால்,  வாழ்கைக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்ற அழுத்தமானச் செய்தி அர்ப்பணிப்பிற்கு நேராக அவனை உந்தித் தள்ளியது. வீட்டில், சூரிய ஒளிப் புகாதத் தனியறையில், கண்ணீருடன் முழங்காலில் நின்று இயேசு கிறிஸ்துவுக்குத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தான். தன்னிடமிருந்த பாவமான பழைய மனிதனைக் களைந்து, புதிய மனிதனைத் தரித்துக்கொண்டான்; தன் வாலிபத்தின் வாழ்க்கை முழுவதையும் அவர் விரல்களில் சமர்ப்பித்தான். அவனது இந்த மாற்றம், முழுக் குடும்பத்தை மாத்திரமல்ல, நண்பர்களையும் மற்றும் அவன் வாழ்ந்துகொண்டிருந்த சமுதாயத்தையையுமே  சந்தோஷத்தில் ஆழ்த்தியது. அந்தகாரத்தில் அணைந்துகொண்டிருந்த அவனது வாழ்க்கை உலகிலே ஒளியானது. 

கிறிஸ்துவுக்குள் பிரியமான வாலிப சகோதரனே! சகோதரியே! நம்முடைய வாழ்க்கை எங்கே? எப்போது? எப்படி? நிறைவுறும் என்பதை அறியும் அறிவு நமக்கு இல்லையே! நேசிக்கும் உறவுகளை விட்டு நமது உயிர் எப்போது பிரியும் என்பதை யோசிக்க நமக்கு பெலனில்லையே! அப்படியிருக்க, இந்த வாலிபத்தை எத்தனை அர்த்தமுடையதாக நாம் மாற்றவேண்டும். 'பழைய மனிதனைக் களைந்து புதிய மனிதனைத் தரித்துக்கொள்வதற்கு, இம்மண்ணிலே கொடுக்கப்படும் வாய்ப்புகளை நாம் தவறவிடுவோமென்றால், உயிரோடிருந்தாலும், மரித்தவர்களாக காட்சியளிப்போம்.' அந்த வாலிபனுக்கு உதவிய, 'மருத்துவரைப் போல ஊழியர்களும், மருந்துகளாக வேத வசனங்களும்' உங்கள் வாலிபத்தை உயிர்பெறச் செய்யவே! வாழ்க்கையைத் தந்தவரை மறந்துவிட்டு, வாழ்க்கையைத் தொடர நாம் முற்படக்கூடாதே! இன்றும் நமது ஜீவன் அவர் கரத்திலேயே! ஜீவனைத் தந்தவருக்காகவே என்றும் நம்; ஜீவன் செலவழிக்கப்படட்டும். 

வாலிபனே! உலகம் என்னும் உள்ளறையிலே, உன்னோடு உண்டு உறங்கியோர் பலர், உயிரிழந்து ஊருக்கே உடலாயிருக்க, உன்னை மட்டும் உலாவவிட்டதேன்? உடனே இக்கேள்விக்கு விடை தேடேன்! 

'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ;டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.' (2 கொரி. 5:17)


வாலிபனே! உன் உச்சிதமானவைகள் யாருக்கு உணவாகிறது?

 


கிறிஸ்துவில் பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் புதுவருட வாழ்த்துதல்கள். இப்புதிய ஆண்டில், தேவனோடுள்ள உங்கள் உறவு, உங்களை தேவ சித்தத்திற்கு நேராக நகர்த்த ஜெபிக்கிறேன். வருடத்தின் தொடக்க நாட்களில், பல்வேறு திசைகளிலிருந்து எழும் ஆராதனைகள், ஜெபங்கள், கூடுகைகள் மற்றும் செய்திகள் என அனைத்தும் தீர்மானங்களின் திசையினை நோக்கி உங்களை உந்தித் தள்ளினாலும், 'உங்கள் வாலிபத்தின் உச்சிதமானவைகள் யாருக்கு உணவாகிக்கொண்டிருக்கிறது?' என்பதனை இப்புதிய ஆண்டில் சற்று ஆராய்ந்து அறியவும், ஆகாதவைகளை அகற்றி ஆண்டவர் பாதம் சேர்ந்து, உங்கள் அர்ப்பணிப்பினைப் புதுப்பித்துக்கொள்ளவும் கர்த்தர் உதவிசெய்வாராக!

இந்நாட்களில், உங்கள் வாலிபத்தின் வாழ்க்கையை, கானான் தேசத்துடன் சற்று ஒப்பிட்டுப் பார்த்து, அதன் அடிப்படையில் சில உண்மைகளை உணர்ந்துகொள்ள உங்களை அழைக்கிறேன். கானான் தேசத்தைச் சுதந்தரிக்கும்படியாக இஸ்ரவேல் ஜனங்களை தேவன் அழைத்து வழிநடத்தினபோது, கானான் தேசத்தை வேவுபார்க்கும்படியாக அனுப்பப்பட்ட மனிதர்கள், மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி (எண். 13:27) என்று அத்தேசத்தினைக் குறித்து உயர்த்திப் பேசினபோதிலும், 'ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம் என்றும், 'நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள்' என்றும், 'நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்' என்றும் சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள் (எண்;. 13:28,31-33).

'கானான் தேசத்தைக் குறித்துச் சொல்லப்பட்டது நற்செய்தி'; எவ்வளவாய் அத்தேசத்தினைச் சுற்றிப் பார்த்தும், அதனைக் குறித்துக் குறைகூற எதுவுமில்லை; ஆனால், அதில் குடியிருப்பவர்களைக் குறித்துச் சொல்லப்பட்ட செய்தியோ துர்ச்செய்தி. இதைக் கேட்டதும், ஜனங்களில் அத்தேசத்தைச் சுதந்தரிக்கவேண்டும் என்று ஆசையுடன் வந்தவர்கள் 'அழத்தொடங்கிவிட்டார்கள்', 'திரும்பிப்போகவும் முடிவெடுத்துவிட்டனர்'. அப்படிப்பட்ட நேரத்திலும், 'தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், ஜனங்களை நோக்கி: 'நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்' (எண்;. 14:6-8) என்று தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! இன்று, கானானைப் போன்ற உங்கள் வாழ்க்கையைக் குறித்ததானச் செய்தி எப்படிப்பட்டது? உங்கள் வாலிபத்தைக் குறித்தும், உங்கள் அறிவைக் குறித்தும், உங்கள் கல்வியைக் குறித்தும், உங்கள் பெலனைக் குறித்தும், உங்கள் செய்கைகளைக் குறித்தும், பிறரோடு நீங்கள் பழகும் விதத்தினைக் குறித்தும் மற்றும் உங்களிடத்தில் வெளிப்படும் அன்பினைக் குறித்தும் ஒருவேளை அநேகர் உங்களை வாழ்த்திப் பேசக்கூடும்; இவ்வுலகில் வாழுகின்ற மக்களைப் பிரியப்படுத்தும் காரியங்கள் அநேகம் உங்கள் வாழ்க்கையில் காணப்படக்கூடும்; என்றபோதிலும், உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும் மேன்மையான இவைகள் அனைத்தையும் ஆளுவது யார்? அனுபவித்துக்கொண்டிருப்பது யார்? உங்களிடத்தில் வெளிப்படும் உச்சிதமானவைகள் அனைத்தும் உணவாகிக்கொண்டிருப்பது யாருக்கு? தேவனுக்குப் பிரியமானவைகளுக்கா? அல்லது தேவனுக்குப் பிரியமற்றவைகளுக்கா? போதை வஸ்துகளுக்கும், தீய பழக்கவழக்கங்களுக்கும், தீய நண்பர்களுக்கும் இவ்வுலகத்தின் மாயமானவைகளுக்கும் தங்கள் வாழ்க்கையை விற்றுப்போட்ட பல வாலிபர்களைக் குறித்த துர்ச்செய்தி, அவர்களது வீட்டாரை, உறவினரை, உடனிருப்போரை, நண்பர்களை மற்றும் சமுதாயத்தை அழச்செய்துவிடக்கூடும்! சமுதாயத்தையே அத்தகைய வாலிபர்களை விட்டு அப்புறமாக்கிவிடக்கூடும்! அதுமாத்திரமல்ல, ஆண்டவருக்காக ஆதாயம்செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன் அத்தகைய வாலிபர்களை நோக்கி வருகின்ற தேவ ஜனங்களையும் திரும்பிப்போகச் செய்துவிடக்கூடும்! ஆண்டவருக்குப் பிரியமற்ற இவ்வுலகத்தின் அந்நிய காரியங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடக்கும் அவர்களை ஆதாயம்செய்வதில் தயக்கத்தையும் தாமதத்தையும் மற்றவர்களுக்கு உண்டாக்கக்கூடும்! 

என்றபோதிலும், இன்றைய நாட்களிலும் 'அந்த தேசத்தை தேவன் நமக்குக் கொடுப்பார்' என்று உங்களைக் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற  ஊழியர்கள் உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம். உங்களை நேசித்து, உங்கள் மீது அன்புகாட்டி, உங்களைத் தேடிவரும் யோசுவா மற்றும் காலேப் போன்ற தேவ ஊழியர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இடம்கொடுப்பீர்களென்றால், உங்கள் வாழ்க்கை தேவனுடையதாகும், தேவனுக்குப் பிரியமில்லாதவைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்த உங்கள் வாழ்க்கை, தேவனுக்குச் சொந்தமாக மாறும், தேவனுக்குப் பிரியமான கானானாக இவ்வுலகத்தாருக்குக் உங்கள் வாழ்க்கை காட்சியளிக்கும். உச்சிதமான உங்கள் வாழ்க்கையின் தாலந்துகள், திறமைகள் மற்றும் அறிவு என அனைத்தும் தேவனுடைய இராஜ்யத்திற்காகப் பயன்படும். இவ்வுலகத்தில் மாத்திரமல்ல, பரலோகத்திலும் உங்கள் பிரயாசத்தின் பெலனைக் காணுமளவிற்கு உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறும். உங்களை வெறுத்தவர்களும், வேண்டாம் என்று ஒதுக்கியவர்களும்கூட உங்களால் பயனடையும் நிலைக்கு உங்கள் பாத்திரம் கர்த்தரால் நிரம்பிவழியும்.  

'உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது' (ஏசா. 1:7) என்ற நிலை மாறி, 'நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை' (எரே. 30:8) என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும். இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தினை இவ்வாண்டில் வாலிபர்களாகிய நீங்கள் சுதந்தரித்துக்கொள்ள கர்த்தர் உங்களை வழிநடத்துவாராக!

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

  கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். நிலையில்லாத இப்பூமியில் ஆண்டவருக்காக நிற்க...