உலகையே உலுக்கிய நாட்கள் அவை; வீட்டினுள் வாழுவோரையும் விட்டுவைக்காமல் மனிகுலத்தையே தொற்றுநோய் துரத்திக்கொண்டிருந்த காலம் அது. அந்நாட்களில், சுற்றிலும் சுவர்கள், ஓரமாக இருந்த ஒரேயொரு வாசல் வழியே அவ்வப்போது செவிலியர்களும் மருத்துவர்களும் அவசர அவசரமாக வந்துசெல்லும் காட்சி, இட வலப்புறங்களில் வரிசையாக ஒரே வண்ணத்தில் காணப்பட்ட படுக்கைகளின் மேல் தன்னைப் போலவே மருத்துவமனைச் சீருடையில் சிரம் சாய்த்துப் படுத்திருக்கும் நோயாளிகள், ஒவ்வொருவரின் சப்த நாடிகளும் அடங்கிக்கொண்டிருக்கும் நிசப்தமான நிமிடங்கள் அவை என்ற உணர்வு உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்க, தன்னுடைய நிமிடமும் இத்தரையில் நிறைவுறும் தருவாயில் சிகிச்சையிலிருந்தான் அந்த 19 வயது நிரம்பிய வாலிபன்.
ஒருபுறம், வீட்டில், இரவுப் படுக்கையின்போது தனது நெஞ்சின் மேலேறி விளையாடும் தனது அக்காவின் ஒன்றரை வயதுக் குழந்தையின் நினைவு அகத்தை ஆக்கிரமித்து நிற்க, உறவுக்கென்று இருபுறமும் ஒருவரும் இல்லாத உள்ளறையிலே, திரைகளின் நடுவே நித்திரை தூரமாய் விலகி நிற்க, படுக்கையில் சிரம் சாய்த்து, தனக்கு நடப்பதைத் தீவிரமாய்க் கவனித்துக்கொண்டிருந்தான் அந்த வாலிபன். குன்றிய மஞ்சள் வெளிச்சத்தில், தலைக்கு நேர் மேலே தன் தலையினை ஆட்டிய வண்ணம் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறி மாத்திரமே, 'கிரீச் கிரீச் கிரீச் ...' என்று தன்னிடமிருந்த பிழையினால் அறையிலுள்ளோர்களோடு பேசிக்கொண்டிருந்தது. இரவு பகலென வேறுபாடு தெரியாத, சூரியக் கதிர் எழுந்து வராத அந்த உள்ளறையின் கதவு திடீரெனத் திறக்கப்பட, செவிலியர் இருவரோடு உள்ளே நுழைந்தார் மருத்துவர் ஒருவர். மரணத்தில் பயணிக்கப் படுத்திருப்போரைக் காப்பாற்றும் தனது இறுதி முயற்சியாக, அனைவரருகிலும் சென்று ஆறுதலாகப் பேசி விசாரித்து, சிகிச்சையளித்துவிட்டு, செவிலியர்கள் காது மடலருகிலும் ஏதோ முணுமுணுத்துவிட்டுச் சென்றார் அவர். மருத்துவர் வெளியேறியதும், செவிலியர்கள் அந்த வாலிபனருகே நின்று தங்களுக்குள் பேசிக்கொண்ட வார்த்தைகள் அந்த வாலிபனின் செவிகளில் விழ, ஏறக்குறைய இன்னும் இருபது நிமிடங்களில் வாழ்வா சாவா என்பது எல்லோருக்கும் தீர்மானிக்கப்படப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டான் அவன்.
ஒருபுறம், தன்னை உருவாக்க தகப்பனாக அப்பா எடுக்கும் முயற்சியைப் புரிந்துகொண்டும், அவருடன் அதிக நேரத்தைச் செலவிடாத எண்ணம் அவனை வாட்டி வதைக்க, பஞ்சில் பற்றும் நெருப்பு போல அம்மாவின் கொஞ்சும் வார்த்தைகளுக்காக நெஞ்சம் விம்மி ஏங்க, விளையாட்டுக்குக்கூட தன்னை விட்டுக்கொடுக்க மனதில்லாத தனது தங்கையின் பாசத்தை நினைத்துத் உள்ளம் தவிக்க, அக்காவிடம் தனக்குக் கிடைக்கும் அரவணைப்பையும், அத்துடன் அக்காவின் மகள் மீது தான் ஊற்றும் அன்பையும் நினைத்து அவன் மனம் போராட, ஒருமுறையாகிலும் அவர்களனைவரையும் பார்த்துவிடத் துடித்தபோதிலும், சிகிச்சை எனும் சிறைக்குள் தான் அடைக்கப்பட்டிருப்பதை நினைத்து மனதில் நொந்துகொண்டான் அவன். உறவுகளிடம் இனி என் உடல்தான் ஒப்படைக்கப்படுமோ? என்ற இறுதி நிமிடங்களுக்குள் அவனது நினைவுகள் வந்து நின்றுவிட்டத் தருணமது.
ஆரவாரங்கள் ஏதுமின்றி, உடலிலிருக்கும் எண்ணெயில் உயிர் என்னும் திரி எரிவது இனி எத்தனை நிமிடத்திற்கோ! என்ற கேள்வியோடு, வாழ்க்கையின் தீபம் கொஞ்சம் கொஞ்சமாக அணைந்துகொண்டிருக்க, ஐந்து, பத்து, பதினைந்து என நிமிடங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து இருபதைத் தொட்டதும், அறையினுள் நின்றிருந்த செவிலியர்கள் படுக்கையிலிருந்தோரைப் பரிசோதித்து, உயிரிழந்திருந்தோரின் உடல்களை, அந்த வாலிபனது கண்களுக்கு முன்னே அறையிலிருந்து அப்புறப்படுத்தி, உறவினர்களிடம் ஒப்படைக்கத் தொடங்கினர். அந்த வாலிபன் மாத்திரம் திறந்த விழி மூடாமல் செவிலியர்களைத் திரு திருவெனத் திகைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு, அவனை மட்டும் அப்படியே படுக்கையில் விட்டு விட்டு, மற்றவர்களைப் பரிசோதிக்கும் பணியைத் தொடர்ந்தனர்; அந்த வாலிபனோ, தன் படுக்கையிலிருந்து எழுந்து படுக்கைகளின் நடுவே நின்றுகொண்டிருந்தான். அந்நேரம், அறையினுள் திடீரென நுழைந்த மருத்துவரோ, நின்றுகொண்டிருக்கும் வாலிபனை உற்றுப் பார்த்த வண்ணம், ஆச்சரியத்தில் உறைந்து நின்றார். 'இப்பொழுது எப்படி இருக்கிறது தம்பி?' என்ற மருத்துவரின் கேள்வியையும், 'சற்று படுக்கையில் படுங்கள்' என்ற அவரது ஆலோசனையையும் கேட்ட வாலிபன், தான் உயிர் பிழைக்க அவர் உழைத்ததை நினைத்து அவருக்கு நன்றி சொல்லக்கூட மனதற்றவனாக, சற்றும் தாமதிக்காமல் தப்பித்தோம் பிழைத்தோம் என பயந்து ஓடி, அறைக்கு வெளியே தன் மகனுக்காகக் கண்ணீரோடு காத்து நின்றுகொண்டிருந்த தனது தாயின் கழுத்தைக் கட்டித் தழுவிக்கொண்டவாறு, கனவு கலைந்து விழித்து கட்டிலில் எழுந்தமர்ந்தான்.
காலையில், தனது வாழ்க்கையைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கிய அவன், 'மரணம்' என்ற மனிதர்கள் எழுதும் பரீட்சையில், மருத்துவர்கள் உதவினாலும், தேவனே உயர்ந்து நிற்கிறாரென்ற உண்மையைப் புரிந்துகொண்டான். மரண வாசலில் தான் வைக்கப்பட்டுவிட்டால், வாழ்கைக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்ற அழுத்தமானச் செய்தி அர்ப்பணிப்பிற்கு நேராக அவனை உந்தித் தள்ளியது. வீட்டில், சூரிய ஒளிப் புகாதத் தனியறையில், கண்ணீருடன் முழங்காலில் நின்று இயேசு கிறிஸ்துவுக்குத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தான். தன்னிடமிருந்த பாவமான பழைய மனிதனைக் களைந்து, புதிய மனிதனைத் தரித்துக்கொண்டான்; தன் வாலிபத்தின் வாழ்க்கை முழுவதையும் அவர் விரல்களில் சமர்ப்பித்தான். அவனது இந்த மாற்றம், முழுக் குடும்பத்தை மாத்திரமல்ல, நண்பர்களையும் மற்றும் அவன் வாழ்ந்துகொண்டிருந்த சமுதாயத்தையையுமே சந்தோஷத்தில் ஆழ்த்தியது. அந்தகாரத்தில் அணைந்துகொண்டிருந்த அவனது வாழ்க்கை உலகிலே ஒளியானது.
கிறிஸ்துவுக்குள் பிரியமான வாலிப சகோதரனே! சகோதரியே! நம்முடைய வாழ்க்கை எங்கே? எப்போது? எப்படி? நிறைவுறும் என்பதை அறியும் அறிவு நமக்கு இல்லையே! நேசிக்கும் உறவுகளை விட்டு நமது உயிர் எப்போது பிரியும் என்பதை யோசிக்க நமக்கு பெலனில்லையே! அப்படியிருக்க, இந்த வாலிபத்தை எத்தனை அர்த்தமுடையதாக நாம் மாற்றவேண்டும். 'பழைய மனிதனைக் களைந்து புதிய மனிதனைத் தரித்துக்கொள்வதற்கு, இம்மண்ணிலே கொடுக்கப்படும் வாய்ப்புகளை நாம் தவறவிடுவோமென்றால், உயிரோடிருந்தாலும், மரித்தவர்களாக காட்சியளிப்போம்.' அந்த வாலிபனுக்கு உதவிய, 'மருத்துவரைப் போல ஊழியர்களும், மருந்துகளாக வேத வசனங்களும்' உங்கள் வாலிபத்தை உயிர்பெறச் செய்யவே! வாழ்க்கையைத் தந்தவரை மறந்துவிட்டு, வாழ்க்கையைத் தொடர நாம் முற்படக்கூடாதே! இன்றும் நமது ஜீவன் அவர் கரத்திலேயே! ஜீவனைத் தந்தவருக்காகவே என்றும் நம்; ஜீவன் செலவழிக்கப்படட்டும்.
வாலிபனே! உலகம் என்னும் உள்ளறையிலே, உன்னோடு உண்டு உறங்கியோர் பலர், உயிரிழந்து ஊருக்கே உடலாயிருக்க, உன்னை மட்டும் உலாவவிட்டதேன்? உடனே இக்கேள்விக்கு விடை தேடேன்!
'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ;டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.' (2 கொரி. 5:17)