தூரமும் துன்மார்க்கமும்
கிறிஸ்துவில் பிரியமான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். நம்முடைய வாழ்க்கையில் பிரியமான மனிதர்களை விட்டு பிரிய நமக்கு மனதிருப்பதில்லை; என்றபோதிலும், சில நேரங்களில், பெற்றோரையும் மற்றும் நம்மைப் பாதுகாக்கும் அரண்களாயிருக்கும் மனிதர்களையும் விட்டுப் பிரிந்து தூரமாகச் செல்லும் சூழ்நிலை உண்டாகும்போது, நம்முடைய வாழ்க்கையில் 'பிதாவை மறக்கச் செய்வதையே' தனது பிரதானப் பணியாகக் கொண்டு செயல்படும் சத்துருவின் கிரியைகளையும் மற்றும் தந்திரங்களையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியதும், அவைகளுக்குத் தப்பிக்கொள்ளவேண்டியதும் அவசியம். தரிசனத்தோடு வளர்க்கும்படியாக தந்திருக்கும் 'கர்த்தருடைய சுதந்திரமாகிய' அவர்களை விட்டு பெற்றோர் விலகிச்சென்றுவிட்டால், அல்லது, பெற்றோருக்கும் தங்களுக்கும் இடையிலான இடைவெளியினை பிள்ளைகள் அதிகப்படுத்திவிட்டால், தூரத்திலிருக்கும் துஷ்டர்கள் வாழ்க்கையின் வட்டத்திற்குள் வந்துவிடக்கூடும்.
தேவனுக்குத் தூரமான வாழ்க்கை, மனிதனை துன்மார்க்கத்திற்கு அருகிலே அழைத்துச் செல்லும். பாதுகாப்பின் வேலியை விட்டு வெளியே பயணித்தால், பிசாசு விரித்துவைத்திருக்கும் வலைகளின் கண்ணிகளில் நமது கால்கள் சிக்கிக்கொள்ளக்கூடும். ஆவிக்குரிய வாழ்க்கையின் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வதில் நமக்கு இருக்கும் பொறுப்பு மிக அதிகமே; என்றபோதிலும், அடுத்தவரால் அது உடைபட நேரிட்டாலும், 'கை தவறி தரையிலே விழுந்துவிட்டால் வீணாய்ப் போகும் அடைகாக்கப்படாத முட்டைகளைப் போலல்ல; அவரால் காக்கப்பட்ட முட்டையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் குஞ்சுகளாகவே உலகிற்கு நம்மை வெளிப்படுத்தவேண்டும்.'
வீட்டை விட்டு விரட்டப்பட்டதால் வீணரோடு இணைந்த யெப்தா : மனைவியையுடைய புருஷனாயிருந்தபோதிலும், பரஸ்திரீயினை (hயசடழவ-வேசி) நாடிச் செல்லும் பழக்கமுடையவனாயிருந்தான் கீலெயாத். விளைவு, வேசியாக நடித்த மருமகளாகிய தாமாரினிடத்தில் யூதா பிரவேசித்து சிக்கிக்கொண்டதைப்போல (ஆதி. 38:24,25), கீலெயாத்தும் சிக்கியிருக்கக்கூடும். 'அவனாலே நான் கர்ப்பவதியானேன்' என்று தாமார் யூதாவை காட்டிக்கொடுத்ததுபோல, அந்த வேசியும் 'கீலெயாத்தினால் நான் கர்ப்பவதியானேன்' என்று காட்டிக்கொடுக்க எத்தனித்திருக்கக்கூடும்; அல்லது, 'உன்னுடைய பிள்ளையை வந்து வாங்கிக்கொண்டுபோ; வேசியாகிய என்னால் அதனை வளர்க்க இயலாது' என்று அவள் வற்புறுத்தியிருக்கக்கூடும். இதனால், தன்னுடைய பெயருக்கு அவமானம் வந்துவிடக்கூடாது என்பதினாலேயோ, அல்லது தன்னுடைய தவற்றினாலே ஒரு குழந்தை பிறந்துவிட்டதே! என்ற இரக்கத்தினாலேயோ, கீலெயாத் அந்த குழந்தையை தனது வீட்டில் வளர்க்கத் தீர்மானித்திருக்கக்கூடும். தனது தவற்றினை வீட்டாரிடத்தில் மறைத்து, தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடத்தில், யெப்தாவை 'தத்தெடுக்கப்பட்ட மகன்' என்று கீலெயாத் அறிமுகப்படுத்தியிருக்கவும்கூடும். எனவே, வேதம் அவனை 'பரஸ்திரீயின் குமாரன்' (son of an harlot) என்று அடையாளம் காட்டுகின்றபோதிலும், யெப்தாவின் மனைவி பெற்ற குமாரர் அவனை 'அந்நிய ஸ்திரீயின் மகன்' (son of a strange woman) என்று அழைக்கின்றனர்.
வேசியினிடத்தில் பிறந்த பிள்ளை என்றபோதிலும், அதனை வீசிவிடாமல், தத்தெடுத்தப் பிள்ளையைப் போல தனதாக்கி கீலெயாத் வளர்க்க நினைத்தபோதிலும், கீலெயாத்தின் மனைவிக்குப் பிறந்த மற்ற பிள்ளைகளால் இதனைச் சகித்துக்கொள்ள இயலவில்லை; தங்கள் குடும்பத்தில் ஒருவனாக யெப்தாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை யெப்தாவின் மனைவி தான் பெற்ற குமாரர்களிடத்தில், 'அவன் அந்நிய ஸ்திரீயின் மகன்' என்று அடிக்கடி கூறிவந்திருக்கக்கூடும்; தன்னுடைய குமாரர்கள் மீது காட்டுகின்ற பாசத்தை, யெப்தாவின் மீது காட்டாமலிருந்திருக்கக்கூடும்; நேரடியாக தனது கணவனிடத்தில் சொல்ல இயலாத யெப்தாவின் மீதான வெறுப்பை, தான் பெற்ற குமாரர்கள் நெஞ்சில் விதைத்திருக்கக்கூடும். இத்தகைய சூழ்நிலையினால், யோசேப்புக்கு விரோதமாக அவனது சகோதரர்கள் எழுந்ததுபோலவே, கீலெயாத்தின் மனைவிக்குப் பிறந்த மற்ற குமாரர்கள் யெப்தாவுக்கு விரோதமாக எதிர்த்து நிற்கின்றனர். 'நீ அந்நிய ஸ்திரீயின் மகன்' (நியா. 11:2) என்று சொல்லி, வீட்டைவிட்டே அவனைத் துரத்தவும் செய்கின்றனர். குமாரர்கள் யெப்தாவுக்கு எதிராகக் கொந்தளித்தபோதிலும், குடும்பத்தில் பிரச்சனை பெரிதாகிக்கொண்டே சென்றபோதிலும், தகப்பனாகிய கீலெயாத் அவர்களைத் தட்டிக்கேட்கவில்லை; அவனால் மௌனமாகத்தான் இருக்க முடிந்தது. கீலெயாத் சொல்லவில்லை. கீலெயாத்தின் மனைவியின் அமைதியும், யெப்தாவை அப்புறப்படுத்துவதற்கு ஒத்திருப்பதாகத்தானே தென்படுகிறது! 'இவன் என்னுடைய மகன்தான்; வேறு ஒரு பெண்ணிடத்தில் நான்தான் இவனைப் பெற்றெடுத்தேன்' என்று ஒருவேளை, 'குழந்தையாயிருந்தபோது, வேறு வழியில்லாமல், வேசியினிடத்திலிருந்து கீலெயாத் யெப்தாவை வாங்கியிருக்கக்கூடும்; ஆனால், இப்பொழுதோ, அவன்தான் வளர்ந்துவிட்டானே! வீட்டை விட்டு வெளியே சென்றாலும் எப்படியாகிலும் பிழைத்துக்கொள்ளுவான் என்று நினைத்து, தனது மனைவிக்குப் பிறந்த மற்ற குமாரர்களின் எதிர்ப்புகளை கீலெயாத் ஒருவேளை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும்.'
யெப்தாவினிடத்திலும், 'நீ எனக்குப் பிறந்த குமாரன்தான்' என்று கீலெயாத் தன்னை அறிமுகப்படுத்தியிருந்திருப்பானோ, நாம் அறியோம். அப்படி அறிமுகப்படுத்தியிருந்தால், 'நீ அந்நிய ஸ்திரீயின் மகன்' என்று கீலெயாத்தின் மனைவிக்குப் பிறந்த குமாரர்கள் அவனைத் துரத்தும்போது, 'நான் என்னுடைய தகப்பன் வீட்டில்தான் இருக்கிறேன்' என்று யெப்தா பதிலுரைத்திருப்பானே! எது எப்படியாகிலும், வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட யெப்தா, துன்மார்க்கமான மனிதர்களோடுதான் தனது வாழ்க்கையைக் கழிக்கத் தொடங்குகின்றான்; 'வீணரான மனுஷரைக் கூட்டிக்கொண்டு (vain men, worthless men, gang of scoundrels, robbers, lawless men – என்கின்றன பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள்) யுத்தத்திற்குச் செல்வதையே தனது வழக்கமாகவும் கொண்டிருந்தான் (நியா. 11:3). வீட்டை விட்டு வீதிக்கு விரட்டப்பட்டதினால் அல்லவோ யெப்தா துன்மார்க்கருக்குத் தோழராகிப்போனான்.
வீட்டை விட்டு வெளியேறியதால் துன்மார்க்கத்தில் விழுந்த இளைய குமாரன்: தகப்பனுடைய வீட்டை விட்டுப் பிரிந்து சென்ற இளைய குமாரனின் வாழ்க்கையும் வெளிப்படுத்தும் சத்தியம் இதுதானே! உலகத்தின் மேல் மோகம் கொண்டு, தகப்பனுடைய வீட்டை விட்டு தானாகப் பிரிந்துசெல்ல விரும்பிய அவன், தகப்பனை நோக்கி: 'தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும்' என்று கேட்கிறான். இளைய குமாரனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், தகப்பன் ஒருகணம் திகைத்து நின்றிருக்கக்கூடும்; அவனை அமரச்செய்து சில ஆலோசனைகளையும் முன்நிற்கும் ஆபத்துகளையும் சொல்ல முயற்சித்திருக்கக்கூடும்; தன்னோடிருப்பதினால் கிடைக்கும் பாதுகாப்பின் பெலத்தை எடுத்துரைத்திருக்கக்கூடும்; என்றபோதிலும், தகப்பனது வார்த்தைகளின் பெலத்தைக் காட்டிலும், உலகத்தின் வாழ்க்கையின் பெலத்தினால் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்த இளையகுமாரன், 'பிரிவையே விரும்பி நின்றான்'. தகப்பனை விட்டு, தூரமாக அவனை இழுத்துச் சென்ற அந்தப் பிரிவு, அவனை 'துன்மார்க்கத்திற்குள்ளேதானே அழைத்துச்சென்றது'. 'என்னை அம்மா என்றோ அப்பா என்றோ கூப்பிடாதே', 'உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை', 'நீ எக்கேடும் கெட்டுப் போ', 'உன்னை நான் இனி கேட்கவே மாட்டேன்' போன்ற தவறான கோபமான வார்த்தைகளை சில குடும்பங்களில் பெற்றோர்களின் வாயிலிருந்து புறப்படச்செய்தும், அல்லது வாலிபத்தின் நாட்களில் பெற்றோர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியவும் இணங்கவும் மனதில்லாமலும், அநேக வாலிபர்களையும் பெற்றோர்களையும் இன்றைய நாட்களில் சத்துரு பிரித்துவிடுகின்றான்; இத்தகைய சத்துருவின் சதிக்கு வாலிபராகிய உங்களை கர்த்தர் விலக்கிக் காப்பாராக!
பிரியமான வாலிபரே! பெற்றோர் பிள்ளைகளுக்குத் தூரமானாலும், பிள்ளைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்துசென்றாலும், அவர்களை 'துஷ்டர்களாகவும், வீணராகவும்' மாற்றிவிட இன்றைய உலகம் ஆயத்தமாயிருக்கிறது. படிப்பின் நிமித்தமாகவோ, அல்லது வேலையின் நிமித்தமாகவோ பெற்றோர்களையும், நல்வழியில் நடத்தும் நபர்களையும் மற்றும் ஊழியர்களையும் விட்டு தூரமாக வசிக்க நேரிட்டாலும், அவர்களது தொடர்பிலிருந்து முற்றிலும் விலகிச்சென்றுவிடுவீர்களென்றால், துஷ்டர்கள் உங்களது வாழ்க்கையின் வட்டத்திற்குள் வந்துவிடக்கூடும்; அவர்கள் உங்களை தங்களுக்காகப் பயன்படுத்தவும் தொடங்கிவிடக்கூடும்; மாத்திரமல்ல, உங்களது வாலிபத்தின் பெலனை உறிஞ்சி, அதனை தங்களுக்கு உணவாகவும் மாற்றிவிடக்கூடும். எனவே, ஆவிக்குரிய நண்பர்கள், ஐக்கியம், ஆலோசனை தரும் முதியவர்கள் மற்றும் ஆலய ஆராதனை போன்றவைகளுடனான உங்கள் தொடர்பினையும் மற்றும் உறவினையும் விட்டுவிடாமல் காத்துக்கொள்ள தேவன் உதவிசெய்வாராக!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக