பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கின்ற வாலவயதின் குமாரரே! குமாரத்திகளே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எனது அன்பின் வாழ்த்துகள். இன்றைய நாட்களில், பல்வேறு சூழ்நிலைகள் வாலிபருடைய வாழ்க்கையை இருப்பிடத்திலேயே இருக்கச் செய்தாலும், சுற்றத்தாரும் தங்களைத் தூரப்படுத்திக்கொண்டாலும், எண்ணமற்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டாலும், தேவனுடைய அழைப்பின் அவசரத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்களென்றால், உங்களை வெறுத்தவர்களுக்கு முன்பாகவே நீங்கள் வீரனாக முடியும் என்பதையும், இப்பூமியில் தேவராஜ்யத்தின் பணியில் உங்களுக்கென ஓர் அரியணையும் ஆயத்தமாவது நிச்சயம் என்பதையும் வலியுறுத்தவே இச்சிறு செய்தியினை கொண்டுவருகின்றேன்.
யெப்தாவை 'பலத்த பராக்கிரமசாலி' என்று வேதம் வர்ணிக்கின்றபோதிலும், 'அவன் ஒரு பரஸ்திரீயின் குமாரன்' (நியா. 11:1) (வேசியின் மகன் - he was the son of an harlot) என்று கூறவும் வேதம் தவறவில்லை. யெப்தாவின் தாய் வேசி என்றால், தந்தை கீலெயாத் வேசித்தனத்தில் விழுந்தவன்தானே! என்றபோதிலும், யெப்தாவின் உடன் பிறந்தவர்களோ, தவறு செய்த தங்கள் தகப்பனுக்கு விரோதமாக எதுவும் எதிர்த்துப் பேசவில்லை; மாறாக, தகப்பனுடைய தவற்றிற்குப் பலனாகப் பிறந்துவிட்ட யெப்தாவுக்கு விரோதமாகத்தான் குரல் எழும்புகின்றனர்; 'நீ அந்நிய ஸ்திரீயின் மகன்' (நியா. 11:2) என்று சொல்லி பரிகசித்து புறம்பாக்குகின்றனர்; வீட்டைவிட்டு அவனைத் துரத்துகின்றனர். தன்னுடைய தவற்றின் நிமித்தம், தேவனிடத்திலிருந்து ஜனங்கள் மீது தண்டனை வந்தபோது, 'இதோ, நான் தான் பாவஞ்செய்தேன். நான் தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்' (2சாமு. 24:17) தாவீது. அதைப்போல, 'நான்தானே தவறுசெய்தேன், அதன் பலனாகப் பிறந்துவிட்ட குழந்தை யெப்தா என்ன செய்வான்; நான்தானே தண்டனைக்குரியவன்' என்று தகப்பன் கிலெயாத் சொல்லவில்லையே! இந்நிகழ்வு, விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் இயேசு கிறிஸ்துவினிடத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, அவளுடன் விபச்சாரம் செய்த ஆண்களை விட்டுவிட்ட நிகழ்விற்கு ஒத்ததே (யோவான் 8:3-7). பிரியமான வாலிபரே! யெப்தாவின் வாழ்க்கையில் நடந்ததுபோல, பிறருடைய தவறுகள் உங்கள் மீது சுமத்தப்படுமென்றால், உங்கள் நிலை என்ன? உங்கள் எதிர்காலத்தை எப்படிச் செலவிடுவீர்கள்? உங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கும் தேவனோடு வாழ்க்கையைத் தொடருவீர்களா? அல்லது விரட்டிவிட்டவர்கள் மீதான விரோதத்தையே வளர்த்து வளர்த்து வாழ்க்கையை வீணாக்கிவிடுவீர்களா? தீர்மானிப்பது உங்கள் கையிலேயே!
தகப்பன் செய்த தவற்றிற்காக, வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட யெப்தா, துன்மார்க்கமான மனிதர்களோடுதான் தனது வாழ்க்கையைக் கழிக்கத் தொடங்கினான்; 'வீணரான மனுஷரைக் கூட்டிக்கொண்டு (vain men, worthless men, gang of scoundrels, robbers, lawless men" என்கின்றன பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள்) யுத்தத்திற்குச் செல்வதையே தனது வழக்கமாகவும் கொண்டிருந்தான் (நியா. 11:3). நமது ஊர் பாஷையில் சொல்லவேண்டுமென்றால், 'ஒரு ரவுடியைப் போல' அவன் அத்தகைய மனிதர்களால் இயக்குவிக்கப்பட்டிருக்கக்கூடும். என்றபோதிலும், துரத்தப்பட்ட யெப்தாவின் மேல் தேவனது பார்வை இருந்தது; தன்னுடைய வளையத்திற்குள் அவனை ஈர்த்து அவனை வனைய முற்பட்டார் தேவன். அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம்பண்ண வந்தநாட்களில், கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தேடிச்சென்றபோது, 'யெப்தா அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டதினால்', தன் ஜனத்தின் மேல் யெப்தாவை நியாயாதிபதியாக ஏற்படுத்தி அதை சாத்தியமாகவும் மாற்றினார் தேவன் (நியா. 11:4-8). தொடர்ந்து, 'யெப்தா தன் காரியங்கைளயெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்' (நியா. 11:11) என்று வாசிக்கின்றோமே. அதுமாத்திரமல்ல, 'கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்' (நியா. 11:29) என்றும் வேதம் சாட்சியிடுகின்றதே! மாத்திரமல்ல, 'யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனை பண்ணினான்' (நியா. 11:30) என்றும், 'யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்' (நியா. 12:7) என்றும் வாசிக்கின்றோமே! இவை அனைத்தும் எத்தனை ஆச்சரியமான செய்திகள்! எத்தனை ஆனந்தமான செய்திகள்!
துன்மார்க்கமான மற்றும் வீணரான மனிதர்கள் மத்தியில் யெப்தா வழ்ந்துகொண்டிருந்தபோதிலும், தன் நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தபோதிலும், தேவனிடத்திலிருந்து தன்னை நோக்கி வரும் ஒரு தூண்டிலில் தனது வாழ்க்கையைச் சிக்கவைத்துக்கொண்டதினால்; அவரது சித்தத்தை நிறைவேற்றும் மனிதனாக மாறிவிட்டானே! அதுமாத்திரமல்ல, 'கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்தார்' (1சாமு. 12:11) என்று தேவனால் பயன்படுத்தப்பட்ட மனிதர்களின் வரிசையிலும் யெப்தா வந்துவிட்டானே! பிரியமான வாலிபரே! உங்கள் வாழ்க்கையிலும் இது சாத்தியமே! வீட்டாரால் விரட்டப்பட்டாலும், சகோதரர்களால் ஒதுக்கப்பட்டாலும், உறவினர்களால் தள்ளப்பட்டாலும், ஜனத்தின் நிமித்தம் தன்னிடத்தில் வந்த அழைப்புக்கு யெப்தா இடங்கொடுத்ததால், துன்மார்க்கத்திலிருந்து அவன் தப்புவிக்கப்பட்டு, தேவனால் உயர்த்தப்பட்டான்.
தாவீதின் வாழ்க்கையும் இதற்கொத்ததே. தகப்பனால் மற்றும் சொந்த சகோதரர்களால் கண்டுகொள்ளப்படாத நிலையில் அவனது வாழ்க்கை ஒருவேளை காணப்பட்டபோதிலும், அவனோ தேவனோடிருக்கக் கற்றுக்கொண்டான். தேவ பெலத்தை அனுதினமும் வாழ்க்கையில் அனுபவித்துப் பழகிய அவன், யெப்தாவைப் போல வீணரான மனுஷரோடு கலந்துவிடவில்லை, இளையகுமாரனைப் போல துன்மார்க்கத்திற்கும் தனது வாழ்க்கையில் இடமளிக்கவில்லை; மாறாக, இடையனாக இருந்தபோதிலும், தனக்கும் தேவனுக்கும் இடையிலான உறவினைப் பெலப்படுத்திக்கொண்டவனாக, அதிலேயே உறுதியாக வாழ்க்கையினைத் தொடர்ந்தான். வீரனாக தேவன் தன்னை முன்நிறுத்தும் வேளை வந்தபோது, தாவீது விலகிச்சென்றுவிடவில்லை; தேவனுடைய நாமம் நிந்திக்கப்படுவதை அவனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை; வேளை வந்ததும் தனக்கு இருக்கும் வேலையினைப் புரிந்துகொண்டவனாக, அழைப்பை அறிந்துகொண்டவனாக, யுத்தத்திற்கு ஆயத்தமானான்; கோலியாத்தை வீழ்த்தி நிந்தையை நீக்கினான்.
கிறிஸ்துவில் பிரியமான வாலிபரே! உங்களது சூழ்நிலை எப்படிப்பட்டதாயும் இருக்கலாம், விரோதஞ்செய்கிறவர்களால் நீங்கள் வளையப்பட்டிருக்கலாம்; என்றபோதிலும், ஜனத்தினிமித்தம் தேவன் உங்களுக்குக் கொடுக்கும் அழைப்பினை நீங்கள் புரிந்துகொள்ளுவீர்களென்றால், அதற்குக் கீழ்ப்படிவீர்களென்றால், உங்கள் வாழ்க்கையை முற்றிலும் அர்ப்பணிப்பீர்களென்றால், தேவன் உங்களை உயர்த்துவது நிச்சயம்.
மனிதர்களின் நிராகரிப்பு, தேவ அழைப்பினின்று ஒருபோதும் நீக்கிவிடாது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக